

மியாமி,
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று காலை 3.30 மணிக்கு நடைபெற்ற 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. இதில் ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் குன்ஹாவுக்கு பதிலாக மாற்று வீரராக நெய்மார் களம் அனுப்பப்பட்டார். 981 நாட்களுக்கு பிறகு அவர் விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். அவர் களத்தில் கால்பதித்ததும் ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது. 20 நிமிடங்கள் விளையாடிய அவர் 24 முறை பந்தை தொட்டார். ஒரு முறை இலக்கை நோக்கியும் அடித்தார். ஆனால் அதை கோல் கீப்பர் பிடித்து விட்டார்.
34 வயதான நெய்மாருக்கு இது 4-வது உலகக் கோப்பை தொடராகும். இதன் மூலம் பிரேசில் அணிக்காக அதிக முறை உலகக் கோப்பையில் ஆடியவர்களான பீலே, ஜல்மா சாண்டோஸ், கபூ (இவர்களும் தலா 4 உலகக் கோப்பை) ஆகியோரை சமன் செய்தார்.
இந்த நிலையில், நெய்மாரின் ஆட்டம் குறித்து பிரேசில் பயிற்சியாளர் கார்லோ அன்சேலோட்டி கூறுகையில், 'இன்றைய ஆட்டத்தில் நெய்மாருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் அவர் அதற்கு தகுதியானவர். காயத்தில் இருந்து மீள்வதற்காக அவர் ரொம்ப கடினமாக பயிற்சி செய்தார். இந்த உலகக் கோப்பையில் தனது திறமையின் மூலம் அவரால் அணிக்கு நிச்சயம் உதவ முடியும் என்று நினைக்கிறேன். சிறிது நேரமே களத்தில் நின்றாலும் நன்றாக விளையாடினார். நெய்மாரை ஊக்கமூட்டுவதற்கு எந்தவித முறைமுக தூண்டுதலும் தேவையில்லை. எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள். இதே போல் பிரேசிலின் சீருடையை அணிவதற்கு அவருக்கு வேறு எந்த விதமான கூடுதல் ஊக்கமும் தேவையில்லை. முன்பு போலவே நெய்மார் இப்போதும் இருக்கிறார். 34 வயதானாலும் சிறுவயதில் இருந்த அதே ஆர்வம் இப்போதும் அவரிடம் உள்ளது' என்றார்.
நெய்மார் கூறுகையில், 3 ஆண்டுக்கு பிறகு மீண்டும் பிரேசில் அணியின் சீருடையை அணிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுளின் அருளால் உடல்ரீதியாக நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். இவ்வ ளவு காலம் ஆடுகளத்தில் இருந்து ஒதுங்கி இருந்தது கடினமாக இருந்தது' என்று குறிப்பிட்டார்.