சென்னையின் எப்.சி. அணி இந்த ஆண்டு சிறப்பாக செயல்படும் - அனிருத் தபா நம்பிக்கை

இந்த ஆண்டுக்கான ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி சிறப்பாக செயல்படும் என்று அந்த அணியின் நடுகள வீரர் அனிருத் தபா தெரிவித்தார்.
சென்னையின் எப்.சி. அணி இந்த ஆண்டு சிறப்பாக செயல்படும் - அனிருத் தபா நம்பிக்கை
Published on

சென்னை,

9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 11 அணிகளும் புதிய வீரர்கள் சேர்க்கையுடன் தங்களை பட்டைதீட்டி வருகின்றன.

2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி இந்த முறை நிறைய வீரர்களை மாற்றி இருப்பதுடன், புதிய பயிற்சியாளரையும் நியமித்துள்ளது. சென்னையின் எப்.சி. அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சென்னையின் எப்.சி. அணியின் இணை உரிமையாளர்கள் விதா டானி, இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டு சீருடையை அறிமுகப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச், வீரர்கள் அனிருத் தபா, ரபெல் கிரிவெல்லாரோ, பல்லோ டியாக்னே, ரோமாரியோ ஜேசுராஜ், கோல்கீப்பர் தேப்ஜித் மஜூம்தார் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் சென்னையின் எப்.சி. அணியின் நடுகள வீரர் அனிருத் தபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'கடந்த 2 வருடங்களாக எங்களது அணியின் செயல்பாடு (கடந்த 2 சீசனில் 8-வது இடம் பெற்றது) திருப்திகரமாக இல்லை. இந்த சீசனுக்கான அணியில் புதிதாக இளம் வீரர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது தான் எங்களது முதல் இலக்காகும். நிச்சயம் இறுதிப்போட்டியை எட்டி கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் சொந்த ஊரில் (சென்னை) விளையாட இருப்பது உற்சாகம் அளிக்கிறது.

ஐ.எஸ்.எல்.-க்கு முன்னதாக தூரந்த் கோப்பை போட்டி நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை ஐ.எஸ்.எல். போட்டிக்கு சிறப்பாக தயாராகுவதற்கு பயன்படுத்தி கொள்வோம். நானும் கடந்த 2 சீசனில் எனது திறமைக்கு தகுந்த படி செயல்படவில்லை. இந்த முறை முழு திறமையை வெளிப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். அதற்காக கடுமையாக உழைப்பேன்' என்றார்.

அணியின் இணை உரிமையாளர் விதா டானி கூறுகையில், 'நாங்கள் பயிற்சியாளரை நம்பி இருக்கிறோம். அவர் சென்னையின் எப்.சி. அணி நல்ல நிலைக்கு திரும்ப வழிவகுப்பார்' என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com