சர்வதேச தரத்துக்கு இணையாக தயாராகி வரும் நேரு விளையாட்டு அரங்கம்

கோவையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கம் ரூ.4 கோடி செலவில் தயாராகி வருகிறது. இந்த அரங்கத்தில் அடுத்த மாதம் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடக்கிறது.
சர்வதேச தரத்துக்கு இணையாக தயாராகி வரும் நேரு விளையாட்டு அரங்கம்
Published on

கோவை,

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா அருகே நேரு விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு கால்பந்து போட்டிகள், தடகள போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் காலை மற்றும் மாலை நேரத்தில் இங்கு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு அரங்கத்திற்குள் இருக்கும் கால்பந்து மைதானத்தை சுற்றிலும் ஓட்டப்பந்தயம் நடத்துவதற்காக 400 மீட்டர் தூரத்துக்கு சிந்தட்டிக் தளமும் உள்ளது. இந்த தளம் ஆங்காங்கே சேதமடைந்து காணப்பட்டதால் இங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். அத்துடன் இங்கு சில வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த விளையாட்டு அரங்கத்தை சர்வதேச தரத்துக்கு இணையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதையடுத்து விளையாட்டு மைதானத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது.

கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் விளையாட்டுகளை 33 ஆயிரம்பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு அங்கு வசதிகள் உள்ளன. அத்துடன் இரவு நேரத்திலும் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக அதிக வெளிச்சத்தை கொடுக்கக்கூடிய 4 மின்விளக்கு கோபுரங்கள் உள்ளன. அதில் 80 விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இங்கு தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளை நடத்தும் வகையில் கால்பந்து மைதானத்தை சர்வதேச தரத்துக்கு இணையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.4 கோடியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி அங்கு புல்தரை, நவீன வசதிகள் கொண்ட உடை மாற்றும் அறை, ஓய்வு அறை, 2 அதிநவீன மின்விளக்கு கோபுரங்கள் உள்பட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது அதற்கான பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

முதற்கட்டமாக கால்பந்து விளையாடும் மைதானத்தில் மண் கொட்டப்பட்டு அதை சமன்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர், அங்கு புற்கள் நடப்படும். சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தும் கால்பந்து மைதானத்தில் என்னென்ன வசதிகள் இருக்குமோ அதுபோன்று இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், சிந்தட்டிக் தளமும் புதிதாக அமைக்கப்படுகிறது. இவை அனைத்தும் அடுத்த மாதத்துக்குள் (டிசம்பர்) முடிக்கப்படும்.

பிறகு இந்த விளையாட்டு அரங்கிற்குள் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகள் அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடக்கிறது. அந்த போட்டிகள் முடிந்த பின்னர் இங்கு மாநில மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com