தெற்காசிய கால்பந்து போட்டி: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி

தெற்காசிய கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
image courtesy: AIFF Official Website via ANI
image courtesy: AIFF Official Website via ANI
Published on

பெங்களூரு,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவரா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்துடன் மோதியது. தொடக்கம் முதலே இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தாலும் முதல் பாதியில் நேபாள அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. நேபாள அணியினர் தடுப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதுடன் பதில் தாக்குதல் தொடுத்தும் நெருக்கடி அளித்தனர்.

இரண்டாவது பாதியில் இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தியது. 61-வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இந்த போட்டி தொடரில் அவர் அடித்த 4-வது கோல் இதுவாகும். இதன் மூலம் அவரது சர்வதேச கோல் எண்ணிக்கை 91 ஆக (139 ஆட்டங்கள்) உயர்ந்தது. 70-வது நிமிடத்தில் மகேஷ் சிங் 2-வது கோலை போட்டார்.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி இருந்தது.

முன்னதாக நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் குவைத் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் நேபாளத்தை தோற்கடித்து இருந்தது.

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் குவைத்தை சந்திக்கிறது. ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் தங்கள் பிரிவில் இருந்து குவைத், இந்தியா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. தலா 2 தோல்வி கண்டுள்ள நேபாளம், பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டன.

இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்-மாலத்தீவு (மாலை 3.30 மணி), பூடான்-லெபனான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com