ஜோதிடம் பார்த்து வீரர்கள் தேர்வு- இந்திய கால்பந்து அணியில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் ஜோதிடம் பார்த்து வீரர்களை தேர்வு செய்தது வெளிவந்துள்ளது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

மும்பை,

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய வீரர்களின் திறமையை பரிசீலிக்காமல், ஜோதிடரை அணுகி வீரர்களின் ராசி பலன்களை பார்த்து தேர்வு செய்தது தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி விளையாடிய போது இந்திய கால்பந்து சங்கத்தின் அதிகாரி ஒருவரின் மூலம் ஜோதிடரை, அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அணுகியிருக்கிறார். அந்த தகுதிச்சுற்றின் ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம், எந்தெந்த வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என அணியின் விவரங்கள் அத்தனையையும் ஜோதிடரிடம் கொடுத்தே இகோர் ஸ்டிமாக் ஆலோசனை பெற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங்11 பட்டியலை 2 நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியுள்ளார்.

ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து , இவர் இன்று நன்றாக விளையாடுவார், இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. ஏனென்றால் அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் கூறியது தான் காரணம்.

மேலும் ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில்  இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம்.

மேலும், இந்திய அணிக்காக ஆலோசனை வழங்கியதற்காக அந்த ஜோதிடருக்கு ரூ. 15 லட்சம் சன்மானமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த விசயம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com