துருக்கி நிலநடுக்கம்: பிரபல கால்பந்து வீரர் மாயம்...!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Image Courtesy: @ChelseaFC
Image Courtesy: @ChelseaFC
Published on

அங்காரா,

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது.

மேலும் இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன.காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின்போது துருக்கியின் பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின. 1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 4000க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்ல் பிரபல கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் முன்னாள் முன்னணி வீரர் கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிளம் இயக்குநர் டானர் சவூத்தையும் காணவில்லை என ஹடேஸ்போர் கிளப்பின் செய்தி தொடரபாளர் முஸ்தபா ஓசத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததால் இவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார். ஹடேஸ்போர் அணியை சேர்ந்த அட்சு மற்றும் சவூத் ஆகிய இருவரை மட்டுமே இன்னும் காணவில்லை மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்தார்.

இது குறித்து கானா ஜனாதிபதி கூறுகையில், துருக்கி நாட்டு மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எங்கள் நாட்டு குடிமகன் கிறிஸ்ட்டியன் அட்சு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம் என கூறியுள்ளார்.

கானா கால்பந்து சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஹென்றி அசாண்டோ ஒரு செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், அட்சு பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை, கானாவில் வெளியுறவுத்துறை துருக்கி அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்றார்.

மேலும் செல்சியா எப்.சி. கால்பந்தாட்ட அணி தனது டுவிட்டர் பக்கத்தில், நாங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம், கிறிஸ்டியன் அட்சு. என பதிவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com