

சிட்னி, -
பெண்கள் கால்பந்து
32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது.
விறுவிறுப்பான இந்த கால்பந்து திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தோல்வி காணாத இங்கிலாந்து
உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி இந்த தொடரில் தோல்வியையே சந்திக்கவில்லை. அந்த அணி லீக் சுற்றில் ஹைதீ (1-0), டென்மார்க் (1-0), சீனா (6-1) ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. 2-வது சுற்றில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும், அரைஇறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது.
கடந்த ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வாகை சூடிய இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருந்த முன்னணி வீராங்கனைகள் லீ வில்லியம்சன், பெத் மிட், பிரான் கிர்பி ஆகியோர் காயம் காரணமாக விலகியதை சமாளித்த இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இதற்கு முன்பு அந்த அணி 3-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும்.
ஸ்பெயின் பதிலடி கொடுக்குமா?
உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி லீக் சுற்றில் ஒரே ஒரு ஆட்டத்தில் (ஜப்பானுக்கு எதிராக 0-4) தோற்று இருந்தது. மற்ற லீக் ஆட்டங்களில் கோஸ்டாரிகா (3-0), ஜாம்பியா அணிகளை எளிதில் வென்றது. 2-வது சுற்றில் 5-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தையும், கால்இறுதியில் கூடுதல் நேரத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும், அரைஇறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனையும் வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன்பு அந்த அணி 2-வது சுற்றை தாண்டியது கிடையாது.
கடந்த ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்இறுதியில் இங்கிலாந்து அணி கூடுதல் நேரத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இருந்தது. இதனால் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க ஸ்பெயின் எல்லாவகையிலும் முயலும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இறுதிப்போட்டியில் மோதும் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். 32 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இறுதிப்போட்டியை எட்டியிராத இரு அணிகள் இறுதியுத்தத்தில் சந்திப்பது இது முதல் தடவையாகும். இந்த போட்டியில் வெல்லும் அணி முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்வதுடன் புதிய சாதனையையும் படைக்கும். அதாவது வெற்றி பெறும் அணி ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெறும். இங்கிலாந்து அணி 1966-ம் ஆண்டும், ஸ்பெயின் அணி 2010-ம் ஆண்டும் ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மகுடம் சூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவீடன் அணிக்கு வெண்கலம்
பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சுவீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது. சுவீடன் அணியில் பிரிடோலினா பெனால்டி வாய்ப்பில் 30-வது நிமிடத்திலும், கோசோவரி அஸ்லானி 62-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.