

பிரிஸ்பேன்,
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 11ஆம் தேதி நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி போட்டிகளில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
அதன்பின் 12ஆம் தேதி கடைசி இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் பிரான்சை பெனால்டி ஷூட்அவுட்டில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, கொலம்பியா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ஸ்பெயின் மற்றும் சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வரும் 20ம் தேதி சந்திக்கும்.