உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணிக்கும், ஸ்பெயின் அணிக்கும் இடையிலான போட்டி டிரா

உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணிக்கும், ஸ்பெயின் அணிக்கும் இடையிலான ஆட்டம் போட்டி டிராவில் முடிந்தது. #FIFAWorld2018
உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணிக்கும், ஸ்பெயின் அணிக்கும் இடையிலான போட்டி டிரா
Published on

சோச்சி,

உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

முதலாவதாக, ஏ பிரிவில் அங்கம் வகிக்கும் எகிப்து-உருகுவே அணிகள் இடையிலான லீக் ஆட்டம் எகடெரின்பர்க்கில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் உருகுவே அணியின் சார்பில் மரியா கிமேனெஸ் 1 கோல் அடித்தார். இறுதிவரை எகிப்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை இதன்மூலம் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவதாக, பி பிரிவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த ஆட்டத்தில் ஆப்பிரிக்க தேசமான மொராக்கோவும், ஆசிய நாடான ஈரானும் மோதின. இதில் முதல்பாதி நேர ஆட்டம் கோல் இன்றி முடிவடைந்தது. அடுத்து நடந்த 2-வது பாதி நேரத்திலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஈரான் அணிக்கு 1 கோல் கிடைத்தது. இதன் மூலம் ஈரான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்றாவதாக, உலக கோப்பை தொடரில் எதிர்பார்ப்புக்குரிய ஆட்டங்களில் ஒன்றாக ஸ்பெயின்- போர்ச்சுகல் (பி பிரிவு) ஆட்டம், சோச்சி நகரில் நடைபெற்றது. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணியில் இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் சரியான கலவையில் இடம் பிடித்திருந்தனர். ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி உலக கோப்பை போட்டியில் அதிகபட்சமாக 3-வது இடத்தை பிடித்து இருக்கிறது. போர்ச்சுகல் அணியினர், அந்த அணியின் நட்சத்திர வீரரான 33 வயதான கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையில் களமிறங்கினர்.

விருவிருப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியில் சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் ஸ்பெயின் அணியின் சார்பில் டியூகோ கோஸ்டா தனது முதல் கோலை அடித்தார். அடுத்ததாக சிறிய இடைவெளியில் ரொனால்டோ தனது இரண்டாவது கோலை அடித்தார். அதைத்தொடர்ந்து ஸ்பெயின் அணியின் டியூகோ கோஸ்டாவும் தனது இரண்டாவது கோலை அடித்தார். பின்னர் ஸ்பெயின் அணி வீரர் நாச்சோ அதிரடியாக 1 கோல் அடித்தார். பரப்பரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஆட்டத்தில் ரொனால்டோ தனது ஹாட்ரிக் கோலை அடித்தார். இதன் மூலம் போர்ச்சுகல் அணியும், ஸ்பெயின் அணியும் 3 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. இதனால் போர்ச்சுகல் அணிக்கும், ஸ்பெயின் அணிக்கும் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com