2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ‘மேட்ச் பிக்சிங்’ - இலங்கை முன்னாள் மந்திரி திடீர் குற்றச்சாட்டு

2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ‘மேட்ச் பிக்சிங்’ நடந்ததாக, இலங்கை முன்னாள் மந்திரி திடீர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
Published on

கொழும்பு,

2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்களுக்கு பிறகு மகுடம் சூடியது. இந்த ஆட்டத்தில் மஹேலா ஜெயவர்த்தனேவின் சதத்தின் உதவியுடன் இலங்கை நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை இந்திய அணி கவுதம் கம்பீர் (97 ரன்), கேப்டன் டோனி (91 ரன்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது.

இந்த ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் என்ற சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே இப்போது குற்றம் சாட்டியுள்ளார். உள்ளூர் டி.வி.சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இப்போது நான் சொல்கிறேன், 2011-ம் ஆண்டு உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம். இறுதி ஆட்டத்தில் மேட்ச்பிக்சிங் நடந்துள்ளது. நான் இலங்கையின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்த போது நடந்த சம்பவம் அது. எனது கருத்தில் இருந்து பின்வாங்கமாட்டேன். அந்த உலக கோப்பையை இலங்கை அணி வென்றிருக்க வேண்டியது. ஆனால் பிக்சிங் செய்யப்பட்டு விட்டது. கிரிக்கெட் வீரர்களை இந்த விவகாரத்தில் உள்ளே இழுக்க நான் விரும்பவில்லை. குறிப்பிட்ட சில குழுக்கள் இதில் ஈடுபட்டது. நாட்டின் நலன் கருதி மற்ற விவரங்களை வெளியிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஏற்கனவே இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்காவும் இலங்கை அணி ஆடிய விதத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கூறி விசாரணை நடத்த வலியுறுத்தி இருந்தார்.

முன்னாள் மந்திரியின் புகாரை அப்போது இலங்கை அணியின் கேப்டனாக இருந்த சங்கக்கரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தீவிரமான குற்றச்சாட்டு. அலுத்காமகே தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை முதலில் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவிடம் வழங்க வேண்டும். அவர்கள் முழுமையாக விசாரணை நடத்திய பிறகு அலுத்காமகே சொல்வது உண்மையா அல்லது பொய்யா? என்பது தெரிய வரும் என்றார். இது அபத்தமான குற்றச்சாட்டு என்று ஜெயவர்த்தனேவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com