பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின் நோவக் ஜோகோவிச் வெற்றி

2026 பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்பதன் மூலம், இத்தொடரில் அதிக முறை பங்கேற்ற ஆண்கள் சாதனைப் பட்டியலில் ஜோகோவிச் இணைந்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின் நோவக் ஜோகோவிச் வெற்றி
Published on

பாரிஸ்,

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் நேற்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய உலகின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச், பிரான்சின் இளம் வீரரான ஜியோவானிம்பெட்சி பெரிகார்ட்டை எதிர்கொண்டார்.

உலகத் தரவரிசையில் 80-வது இடத்தில் இருக்கும் 22 வயதான பெரிகார்ட், உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவோடு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மணிக்கு 223 கி.மீ வேகத்தில் அவர் வீசிய சர்வீஸ்கள் ஜோகோவிச்சிற்கு கடும் சவாலாக அமைந்தன. இதனால் முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் பெரிகார்ட் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும், தனது அபார அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய 39 வயதான ஜோகோவிச், அடுத்தடுத்த செட்களை 7-5, 6-1, 6-4 என்ற கணக்கில் அதிரடியாகத் தன்வசப்படுத்தினார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த விறுவிறுப்பான போராட்டத்தின் முடிவில் ஜோகோவிச் மாபெரும் வெற்றியைப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

போட்டியின் போது பிரெஞ்சு ரசிகர்கள் பெரிகார்ட்டிற்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்தனர். ஆட்டத்தின் முக்கியப் புள்ளியை வென்ற பிறகு, ரசிகர்களை நோக்கி சைகை செய்து வம்பிழுத்த ஜோகோவிச், வெற்றிக்குப் பின் மைதானத்திலேயே மகிழ்ச்சியுடன் நடனமாடி தனது வெற்றியைக் கொண்டாடினார்.

"39 வயதில் இந்த 3 மணி நேரப் போட்டி, மருத்துவர் எனக்குப் பரிந்துரைத்த சரியான உடற்பயிற்சி போல அமைந்தது" என்று ஜோகோவிச் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும், தனது டென்னிஸ் வாழ்க்கையிலேயே தான் எதிர்கொண்ட மிகக் கடினமான சர்வீஸ்களை வீசிய சிறந்த வீரர்களில் பெரிகார்ட்டும் ஒருவர் என அவர் பாராட்டினார்.

இந்த 2026 பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்பதன் மூலம், இத்தொடரில் அதிக முறை பங்கேற்ற ஆண்கள் சாதனைப் பட்டியலில் ஜோகோவிச் இணைந்துள்ளார். இதற்கு முன்பு 2016, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அவர், கடந்த 20 பிரெஞ்சு ஓபன் தொடர்களில் 19 முறை குறைந்தது கால் இறுதி (Quarter-Finals) வரை முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com