4 நாடுகள் மகளிர் ஆக்கி: இந்தியா 3-வது வெற்றி

கோப்புப்படம்
4 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் அணிகள் இடையிலான சர்வதேச ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் நடந்து வருகிறது.
ரோசாரியோ,
அர்ஜென்டினா, இந்தியா, சிலி, உருகுவே ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் அணிகள் இடையிலான சர்வதேச ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் உள்ள ரோசாரியோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
அர்ஜென்டினா அணியில் மில்லாகிராஸ் டெல் வாலியும் (10-வது நிமிடம்), இந்திய தரப்பில் கனிகாவும் (44-வது நிமிடம்) கோலடித்தனர். இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் லால்ரின்புய், லால்தன்துயாங்கி ஆகியோர் தங்கள் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினர்.
அர்ஜென்டினா அணியினர் அடித்த 4 பெனால்டி வாய்ப்புகளையும் இந்திய அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான நிதி அபாரமாக தடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முந்தைய ஆட்டங்களில் சிலி (2-1), உருகுவேயை (3-2) வென்று இருந்த இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் சிலியை நாளை மீண்டும் சந்திக்கிறது.






