

சென்னை,
எம்.சி.சி. முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
தொடக்க நாளில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தமிழ்நாடு-சாய் (போபால்) அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தமிழக அணியில் சோமன்னா (6-வது நிமிடம்). பத்ராஸ் திர்கே (10-வது நிமிடம்). சுமித் கின்டோ (38-வது நிமிடம்). சதீஷ்சும் (42-வது நிமிடம்). சாய் அணியில் ரோகித் சிங் (முதலாவது நிமிடம்), நிதேஷ் ஷர்மா (26-வது நிமிடம்), பாரத் கவுசிக் (38-வது நிமிடம்), சித்தாந்த் சிங்கும் (46-வது நிமிடம்) கோல டித்தனர். இந்திய ராணுவம்- கர்நாடகா மோதிய ஆட்டமும் டிராவில் (1-1) நிறைவடைந்தது.
ராணுவ அணியில் ராகுலும் (8-வது நிமிடம்), கர்நாடக அணியில் ஷமந்தும் (19-வது நிமிடம்) கோல் போட்டனர்.
இன்றைய ஆட்டங்களில் தமிழ்நாடு-பாரத் பெட்ரோலியம் (பிற்பகல் 2.30 மணி), இந்திய ராணுவம்-ரெயில்வே (மாலை 4.15 மணி), இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.