அஸ்லான் ஷா ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.
அஸ்லான் ஷா ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி
Published on

இபோக்,

26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இந்தியா தோல்வி

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் 26-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் கோல்களை திணித்து அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் எட்டி ஒகென்டென் 30-வது நிமிடத்திலும், டாம் கிரேக் 34-வது நிமிடத்திலும், டாம் விக்ஹாம் 51-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். அதன் பின்னர் இரு அணியாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

முன்னதாக இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், எதிரணி வீரர் அடித்த பந்தை தடுக்க முயற்சித்த போது முழங்காலில் காயம் அடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று கோல் கீப்பராக ஆகாஷ் சிக்தே செயல்பட்டார்.

இந்தியா-ஜப்பான் இன்று மோதல்

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவும், 2-வது ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்தும் இருந்த இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதல் லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்துடன் டிராவும், 2-வது ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பதம் பார்த்து இருந்த ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை சந்திக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com