

சென்னை,
16-வது உலகக்கோப்பை ஆக்கி போட்டி வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் இரு பிரிவிலும் தலா 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
இதன்படி ஆண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து ஜப்பான், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, 2-வது இடம் பெற்ற பெல்ஜியம், பிரான்ஸ், மலேசியா, 'சி' பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. பரம எதிரிகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் அங்கம் வகிப்பதால் லீக் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதேபோல் பெண்கள் பிரிவில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பானும், 'பி' பிரிவில் அர்ஜென்டினா, ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்காட்லாந்தும், 'சி' பிரிவில் பெல்ஜியம், ஸ்பெயின், நியூசி லாந்து, அயர்லாந்தும், 'டி' பிரிவில் சீனா, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்காவும் அங்கம் வகிக்கின்றன.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 'ஏ','டி' பிரிவு ஆட்டங்கள் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமிலும், 'பி', 'சி' பிரிவு ஆட்டங்கள் பெல்ஜியத்தில் உள்ள வேவ்ரேவிலும் அரங்கேறுகிறது. இந்திய அணிகள் நெதர்லாந்தில் ஆடுகிறது. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய ஆண்கள் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வேல்சையும் (ஆகஸ்டு 15-ந் தேதி), 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தையும் (ஆகஸ்டு 17), கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும் (ஆகஸ்டு 19) எதிர்கொள்கிறது.
உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய பெண்கள் அணி தனது லீக் ஆட்டங்களில் ஆகஸ்டு 16-ந் தேதி. தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் சீனாவையும், 18-ந் தேதி 19-வது இடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்காவையும், 20-ந் தேதி 6-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தையும் சந்திக்கிறது.