ஆக்கி இந்தியா லீக்: ஆஸ்திரேலிய வீரர் லியாம் ரூ.42 லட்சத்துக்கு ஏலம்

கோப்புப்படம்
2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.
புதுடெல்லி,
2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு கட்ட ஆட்டங்கள் ராஞ்சி, புவனேஷ்வரில் நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், மகளிர் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்கின்றன. நிதி நெருக்கடியால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த உ.பி.ருத்ராஸ் அணியை ஆக்கி இந்தியா லீக் நிர்வாக கவுன்சில் ஏற்று நிர்வகிக்க இருக்கிறது.
ஆக்கி இந்தியா லீக் போட்டிக்கான மினி ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. ஏலப்பட்டியலில் வெளிநாட்டினர் உள்பட 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை குறி வைத்து ஏலம் கேட்டன. ஆஸ்திரேலிய நடுகள வீரர் லியாம் ஹென்டெர்சன் அதிகபட்சமாக ரூ.42 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை வேதாந்தா கலிங்கா லான்செர்ஸ் அணி வாங்கியது.
அந்த அணி மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான கூப்பர் பர்ன்சை ரூ.34½ லட்சத்துக்கு எடுத்தது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணி நெதர்லாந்து வீரர் சாண்டர் டி விஜினை ரூ.36 லட்சத்துக்கு தன்வசப்படுத்தியது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 8 வீரர்களை விடுவித்து விட்டு புதிதாக 4 வீரர்களை வாங்கி இருக்கிறது. இதில் தமிழக வீரர் செல்வராஜூம் அடங்குவார்.
இந்திய ஜூனியர் அணியின் கோல் கீப்பர் விவேக் லக்ராவை எடுக்க பலமுனை போட்டி நிலவியது. ரூ.2 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த அவரை ரூ.23 லட்சத்துக்கு பெங்கால் டைகர்ஸ் தங்கள் பக்கம் இழுத்தது.
மகளிர் பிரிவில், அர்ஜென்டினா நடுகள வீராங்கனையான அகஸ்டினா ரூ.42 லட்சத்துக்கு விலை போனார். அவரை பெங்கால் டைகர்ஸ் அணி வாங்கியது. அர்ஜென்டினா முன்கள வீராங்கனை மரியா ஜோஸ் கிரானட்டாவை ரூ.34 லட்சத்துக்கு சூர்மா ஆக்கி கிளப் வசப்படுத்தியது. கடந்த ஆண்டு விலை போகாத இந்திய நடுகள வீராங்கனை மோனிகா ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை பெங்கால் டைர்கஸ் தங்கள் படையில் இணைத்தது.






