

புவனேஸ்வரம்,
உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று மாலை நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியுமான அர்ஜென்டினா, 7-வது இடத்தில் உள்ள இங்கிலாந்துடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 17-வது நிமிடத்தில் அர்ஜென்டினா முதல் கோல் அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் கோன்சலோ பெய்லாட் இந்த கோலை அடித்தார். 27-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி பதில் கோல் திருப்பியது. பார்ரி மிட்லெடோன் இந்த கோலை திணித்தார்.
முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. 45-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் வில் கால்னன் 2-வது கோலை போட்டார். 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணி வீரர் கோன்சலோ பெய்லாட் மீண்டும் கோல் அடித்தார். இதனால் மீண்டும் சமநிலை (2-2) ஏற்பட்டது. 49-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹார்ரி மார்ட்டின் கோல் போட்டார். அதுவே வெற்றி கோலாக மாறியது. முடிவில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.