

நியூசிலாந்துடனான 100 ஆண்டுகால விளையாட்டு உறவைக் கொண்டாடும் வகையில் அந்நாட்டுக்கு எதிரான ஆக்கித் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இதையடுத்து 2-வது போட்டி இன்று நடைபெற்றது. ஆக்லாந்தில் உள்ள லாயிட் எல்ஸ்மோர் ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் கடைசி வரை விறுவிறுப்பாகப் போராடின. போட்டியின் 25வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் டிலான் தாமஸ் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர் அங்கத் பிர் சிங் 35வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் சாம் ஹிஹா கோல் அடித்து மீண்டும் தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார். இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடினர். அப்போது 57வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை கேப்டன் சஞ்சய் கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலையை எட்டியது. இறுதிவரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது.
இதன் மூலம் இந்திய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி முனைப்பு காட்டும். சொந்த மண்ணில் விளையாடும் நியூசிலாந்து அணியும் வெற்றிக்காகப் போராடும் என்பதால் கடைசிப் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.