இங்கிலாந்து: காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஆக்கி அணி விலகல்

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடக்கும் காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஆக்கி அணி விலகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு (2022) ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகள் விலகி இருக்கின்றன. காமன்வெல்த் போட்டியை அடுத்து ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.

2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய விளையாட்டில் முழு கவனத்தை செலுத்துவதற்காகவும், கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டு இருந்தாலும் இந்திய அணியினர் இங்கிலாந்தில் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடுமையான விதிமுறை நடைமுறையில் இருப்பதாலும் இந்திய ஆக்கி அணிகள் விலகல் முடிவை எடுத்து இருக்கிறது.

காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகும் முடிவை போட்டி அமைப்பாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விடுமாறு ஆக்கி இந்தியா அமைப்பு சார்பில் அதன் தலைவர் ஞானேந்திர நிங்கோபாம், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ராவுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புவனேசுவரத்தில் அடுத்த மாதம் 24-ந் தேதி தொடங்கும் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இருந்து கொரோனா பரவலை காரணம் காட்டி இங்கிலாந்து அணி நேற்று முன்தினம் விலகிய நிலையில், இந்திய அணி தனது முடிவை அதிரடியாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தேசிய பயிற்சி முகாம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய அணியினருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. 2 மாத ஓய்வுக்கு பிறகு அடுத்து வரும் போட்டிகளுக்கு தயாராக இந்திய அணி வீரர்கள் பயிற்சி முகாமில் இணைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com