ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி..!

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கியில் இந்திய அணி தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
image courtesy: Hockey India twitter
image courtesy: Hockey India twitter
Published on

கோலாலம்பூர்,

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 2 முறை சாம்பியனான இந்தியா, 'நம்பர் ஒன்' அணியான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, 6 முறை சாம்பியனான ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 16 நாடுகள் பங்கேற்றுள்ளன.

அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். கடந்த ஆண்டு 4-வது இடத்தை பெற்ற இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஸ்பெயின், கனடா தென்கொரியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில் ஹூன்டல் அராய்ஜீத் சிங் 11-வது நிமிடம், 16-வது நிமிடம் மற்றும் 41-வது நிமிடத்தில் என்று 3 கோல் அடித்து அசத்தினார். அமன்தீப்சிங் 30-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

தென்கொரியா அணி சார்பில் டோயுன் லிம் 38-வது நிமிடத்திலும், மிங்வான் கிம் 45-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த லீக்கில் ஸ்பெயினை நாளை எதிர்கொள்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com