

புவனேசுவரம்,
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான இரண்டு தகுதி சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் பெண்கள் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த தகுதி சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது. இவ்விரு அணிகளும் நேற்று மீண்டும் சந்தித்தன. முதல் ஆட்டத்தை போன்றே இதிலும் இந்தியா சுலபமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த உள்ளூர் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த ஆட்டத்தில் 5 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒலிம்பிக்கில் கால்பதிக்க முடியும் என்ற வெறியுடன் ஆடிய அமெரிக்க வீராங்கனைகள் தொடக்கம் முதலே இந்திய கோல் எல்லையை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்தனர். அதற்கு பலனும் கிடைத்தது. அமெரிக்க வீராங்கனைகள் அமந்தா மகடன் 5-வது நிமிடத்திலும், கேப்டன் கேத்லீன் ஷர்கே 14-வது நிமிடத்திலும், அலிசா பார்கெர் 20-வது நிமிடத்திலும், அமந்தா மகடன் மீண்டும் 28-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டனர்.