

பெங்களூரு,
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழை கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி திரட்டுவதற்காக இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆன்லைன் மூலம் உடல் தகுதி சவால் போட்டியை நடத்தி வருகிறது. இதன்படி வீராங்கனைகள் அளிக்கும் உடல் தகுதி சவாலை ஏற்று செயல்படும் ரசிகர்கள் நன்கொடை வழங்க வேண்டும். 18 நாட்கள் நடத்தப்படும் இந்த சவால் நிகழ்ச்சியில் முதல் 4 நாட்களில் மட்டும் ரூ.7 லட்சம் திரட்டப்பட்டு இருக்கிறது. இது குறித்து இந்திய பெண்கள் ஆக்கி அணியின் வீராங்கனை சுஷிலா சானு அளித்த பேட்டியில், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவுவதற்காக நாங்கள் உடல் தகுதி சவால் மூலம் நிதி திரட்டி வருவதற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது ஆக்கி பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு இருப்பதால், முந்தைய காலங்களில் நாங்கள் விளையாடிய போட்டி மற்றும் எதிரணியினர் ஆடிய போட்டிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்து ஆட்டத்தை ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.