ஆசிய கோப்பை ஆக்கி: வங்காளதேசத்தை நொறுக்கியது இந்தியா

8 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.
ஆசிய கோப்பை ஆக்கி: வங்காளதேசத்தை நொறுக்கியது இந்தியா
Published on

டாக்கா,

8 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக்கில் நேற்று வங்காளதேசத்தை எதிர்கொண்டது. எதிர்பார்த்தது போலவே அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்கள் குட்டி அணியான வங்காளதேசத்துக்கு எதிராக கோல் மழை பொழிந்தனர். 7-வது நிமிடத்தில் குர்ஜந்த்சிங் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ஆகாஷ்தீப்சிங் (10-வது நிமிடம்), லலித் உபத்யாய் (13-வது நிமிடம்), அமித் ரோஹிதாஸ் (20-வது நிமிடம்), ஹர்பமன்பிரீத் சிங் (28, 47-வது நிமிடம்), ரமன்தீப்சிங் (46-வது நிமிடம்) ஆகியோர் வரிசையாக கோல்களை திணித்தனர். வங்காளதேசத்தால் ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை.

முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை சிதறடித்தது. வெற்றியின் மூலம் இந்திய அணி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. 2-வது தோல்வியை தழுவிய வங்காளதேசம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான்-ஜப்பான் அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்திய அணி கடைசி லீக்கில் பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. பி பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் சீனா-ஓமன், தென்கொரியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com