

புவனேஸ்வர்,
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை லீக் சுற்றில் மோத வேண்டும்.
இந்த தொடரில் இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி அடுத்து அர்ஜென்டினாவுக்கு எதிராக 2 லீக் ஆட்டங்களில் மோதுகிறது. இதில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. அர்ஜென்டினா அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த ஆண்டில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்க இருப்பதால் இந்திய அணியில், வாய்ப்புக்காக காத்து இருக்கும் இளம் வீரர்களுக்கு பரீட்சார்த்த முறையில் வாய்ப்பு அளிப்பதை தொடர அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அத்துடன் அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங்குக்கு பதிலாக அமித் ரோஹிதாஸ் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.