புரோ ஆக்கி லீக் போட்டி: இந்திய பெண்கள் அணியில் மீண்டும் ராணி ராம்பால்

புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய பெண்கள் அணியில் மீண்டும் ராணி ராம்பால் இடம்பெற்றார்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

புதுடெல்லி,

9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ பெண்கள் ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

இந்த போட்டி தொடரில் இந்திய பெண்கள் அணி தனது அடுத்த இரண்டு லீக் ஆட்டங்களில் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்தை வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் எதிர்கொள்கிறது. இந்தியா-நெதர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு காயம் காரணமாக ஒதுங்கி இருந்த ராணி ராம்பால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்குள் நுழைந்துள்ள அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை.

கோல்கீப்பர் சவிதா கேப்டனாகவும், தீப் கிரேஸ் எக்கா துணை கேப்டனாகவும் தொடருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக வீராங்கனைகளாக மஹிமா சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் சவான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீராங்கனைகளாக உபசனா சிங், பிரித்தீ துபே, வந்தனா கட்டாரியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com