ஆசிய கோப்பையை வெல்வோம்: இந்திய ஆக்கி பயிற்சியாளர் நம்பிக்கை

ஒவ்வொரு ஆட்டமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, எங்களது உத்வேகத்தை வலுப்படுத்துவோம் என இந்திய ஆக்கி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்
ராஜ்கிர்,
8 அணிகள் இடையிலான 12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வருகிற 29-ந்தேதி முதல் செப்.7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. இதையொட்டி ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் நேற்று ராஜ்கிர் சென்றடைந்தனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
இந்த போட்டிக்காக இந்திய அணி சிறப்பாக தயாராகி இருக்கிறது. பாரீஸ் ஒலிம்பிக்கில் குரூப் பிரிவில் எப்படி வெற்றி பெற்றோமோ அதே போன்ற அணுகுமுறையை கடைபிடிப்போம். வெற்றியோடு தொடங்க விரும்புகிறோம். ஒவ்வொரு ஆட்டமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, எங்களது உத்வேகத்தை வலுப்படுத்துவோம்.
இந்த கோப்பையை வென்று 8 ஆண்டுகள் ஆகி விட்டது என்பதை அறிவோம். இந்த முறை மகுடம் சூடி உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம். எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்’ என்றார்.






