மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

கோப்புப்படம்
மகளிர் ஆசிய கோப்பை ஆக்கியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று ஜப்பானுடன் மோதுகிறது.
ஹாங்சோவ்,
11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதன் லீக் சுற்று முடிவில் சூப்பர்4 சுற்றுக்குள் வந்துள்ள சீனா, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
சூப்பர்4 சுற்றில் இன்று (சனிக்கிழமை) கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை (பிற்பகல் 2.15 மணி) எதிர்கொள்கிறது.
லீக் சுற்றில் 2 வெற்றி (தாய்லாந்து, சிங்கப்பூருக்கு எதிராக) ஒரு டிரா (ஜப்பானுக்கு எதிராக 2-2) என்று தோல்வியை சந்திக்காத சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி சூப்பர்4 சுற்றில் முதலாவது ஆட்டத்தில் தென்கொரியாவை (2-0) பதம் பார்த்தது. முந்தைய ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி 3 பெனால்டி கார்னர் உள்ளிட்ட பல வாய்ப்புகளை கோலாக மாற்றாமல் வீணடித்தது சறுக்கலுக்கு வழிவகுத்தது.
ஜப்பான் அணியை பொறுத்தமட்டில் சூப்பர்4 சுற்றில் 0-2 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் டிரா கண்டது. ஒரு புள்ளி மட்டுமே எடுத்துள்ள அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் களம் காணுகிறது.
3 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி இறுதிப்போட்டிக்குள் நுழையும். குறைந்தது ‘டிரா’வாவது செய்ய வேண்டும். மாறாக தோல்வி கண்டால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழக்க நேரிடும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்து விட்ட சீனா (6 புள்ளி), தென்கொரியாவை (1 புள்ளி) சந்திக்கிறது.






