மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: தென் கொரியாவுக்கு எதிராக சீனா வெற்றி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

image courtesy:twitter/@TheHockeyIndia
சூப்பர்4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனா - தென் கொரியா அணிகள் மோதின.
ஹாங்சோவ்,
11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதன் லீக் சுற்று முடிவில் சூப்பர்4 சுற்றுக்குள் முன்னேறிய சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.
சூப்பர்4 சுற்றில் நேற்று நடந்த தனது கடைசி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் மோதியது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற சீனா - தென் கொரியா ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
இதைத்தொடர்ந்து நடந்த சூப்பர்4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனா-தென் கொரியா அணிகள் மல்லுக்கட்டின. ஏற்கனவே இறுதிப்போட்டியை உறுதி செய்து விட்ட சீனாவை குறைந்தபட்சம் 2 கோல் வித்தியாசத்தில் வீழ்த்தினால் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தென் கொரியா களம் இறங்கியது.
இத்தகைய பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சீன அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அதிர்ஷ்டம் கிட்டியது.
சூப்பர்4 சுற்று முடிவில் சீனா (3 வெற்றி) 9 புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 4 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராட உள்ளன.
முன்னதாக (பகல் 1.30 மணி) நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான்-தென் கொரியா அணிகள் சந்திக்கின்றன.






