பெண்கள் ஆக்கி லீக்: பெனால்டி ஷூட்-அவுட்டில் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி

நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணி, எஸ்.ஜி. பைப்பர்சுடன் மோதியது.
ராஞ்சி,
4 அணிகள் இடையிலான பெண்களுக்கான 2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 5-வது லீக்கில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணி, எஸ்.ஜி. பைப்பர்சுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது. ஆனால் கடைசி 2 நிமிடங்களில் பைப்பர்ஸ் வீராங்கனைகள் சுனேலிதா தோப்போ, லோலா ரியரா ஆகியோர் அடுத்தடுத்து கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தனர்.
வழக்கமான நேரத்தில் 3-3 என்று சமநிலையில் முடிந்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பெங்கால் அணி 4-3 என்ற கணக்கில் பைப்பர்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது. எதிரணியின் பல வாய்ப்புகளை முறியடித்து அசத்திய பெங்கால் கோல் கீப்பர் ஜெனிபர் ரிஜோ ஆட்டநாயகி விருதை பெற்றார்.
இன்றைய ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ்- சூர்மா ஆக்கி கிளப் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.






