

புவனேஸ்வர்,
14வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 16ந்தேதி வரை நடக்கிறது.
இதில் முதல் போட்டியாக பெல்ஜியம் மற்றும் கனடா அணிகள் விளையாடின. இந்த போட்டியில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது.
இதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில், 10வது நிமிடத்தில் இந்தியாவின் மந்தீப் சிங் முதல் கோலை அடித்து அணியின் வெற்றியை தொடங்கினார்.
இதனை அடுத்து 13வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் மற்றொரு கோலை அடித்தார். இதனால் முதல் கால் பகுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. பின் முதல் அரை பகுதி வரை இதே நிலை நீடித்தது. 3வது கால் பகுதியின் இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பு இந்திய அணியால் முறியடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 43வது நிமிடத்தில் 3வது கோல் (சிம்ரன்ஜீத் சிங்) அடிக்கப்பட்டது. அதன்பின் லலித் உபாத்யாய் ஒரு கோலும், சிம்ரன்ஜீத் மற்றொரு கோலும் அடித்து அணியை 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற செய்தனர். இறுதியில் போட்டி முடிவு வரை எதிரணி கோல் எதுவும் எடுக்கவில்லை.
இதனால் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.