

புவனேஸ்வர்,
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் கனடா நாட்டு அணிகள் மோதின.
இந்திய அணியில் பி.ஆர். ஸ்ரீஜேஷ், சுரேந்தர், ஹர்மன்பிரீத், கோதாஜித், நீலகாந்தா, வருண், சிங்லென்சனா, மன்பிரீத், லலித், சிம்ரன்ஜீத், ஆகாஷ்தீப் ஆகிய 11 பேர் விளையாடினர்.
இந்த போட்டியில், இந்திய அணிக்கு கிடைத்த 2வது பெனால்டி கார்னர் வாய்ப்பினை ஹர்மன்பிரீத் கோலாக்கினார். இதனால் முதல் காலிறுதியில் இந்திய அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து அரை ஆட்டம் வரை இந்த நிலை நீடித்தது.
அதன்பின் 39வது நிமிடத்தில் கனடா அணி ஒரு கோல் அடித்தது. இதனால் இரு அணிகளும் 3வது காலிறுதியில் சம நிலையில் இருந்தன. இதன்பின்னர் இந்திய அணியின் சிங்லென்சனா 2வது கோலும், லலித் உபாத்யாய் 3வது கோலும் அடித்தனர்.
தொடர்ந்து அமித், லலித் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். இதனால் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டி முடிவதற்கு 3 நிமிடங்களுக்கு முன் 5வது கோல் அடிக்கப்பட்டது. அதற்கு அடுத்து கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியா கோல் அடிக்கவில்லை. போட்டியின் முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முன் நடந்த மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதனால் புள்ளிகள் கணக்கில் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடியது.