சர்வதேச பேட்மிண்டன் போட்டி தமிழக வீரர் கரண்ராஜன் ‘சாம்பியன்’

கவுதமாலாவில் நடந்த சர்வதேச பியூச்சர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் கவுதமாலா வீரர் ஹாம்பிளர்ஸ் ஹேமண்டை வீழ்த்தி தமிழக வீரர் கே.கரண்ராஜன் சாம்பியன்.
Published on

கவுதமாலா,

மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில் சர்வதேச பியூச்சர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் தமிழக வீரர் கே.கரண்ராஜன், உள்ளூர் வீரரான ஹாம்பிளர்ஸ் ஹேமண்டை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கரண்ராஜன் 21-19, 21-12 என்ற நேர்செட்டில் கவுதமாலா வீரர் ஹாம்பிளர்ஸ் ஹேமண்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் மூலம் அவர் சர்வதேச ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீரர் வென்ற பெருமையை பெற்றார். முன்னதாக நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் போட்டியின் முதல் தர நிலை வீரரான ரூபென் கேஸ்ட்லானோசை, கரண்ராஜன் சாய்த்து இருந்தார். 20 வயதான கரண்ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம்.படித்து வருகிறார். இவர் சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்க துணைத்தலைவர் கே.ராஜராஜனின் மகன் ஆவார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com