செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்: சாதிக்கும் முனைப்பில் இந்தியா

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புடாபெஸ்ட்,

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன.

ஓபன் பிரிவு அணியில் அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோர் உள்ளனர். மகளிர் பிரிவு அணியில் டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்தியர்கள் தவிர்த்து, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், அமெரிக்காவின் பாபியானோ காருனா, பிரான்ஸின் லெவோன் ஆரோனியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியாவுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் இருக்கும் தடை காரணமாக, தொடர்ந்து 2-ஆவது முறையாக ரஷிய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்த போட்டி மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.

'ஸ்விஸ்' முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1 மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சுற்றில் அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள்.

கடந்த முறை இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஆனால் இந்த தடவை முன்பை விட மிகவும் வலுவான அணியாக களம் காணும் இந்தியா தங்கப் பதக்கத்துக்கு குறி வைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com