

லிமா,
உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பெரு தலைநகர் லிமாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 463.4 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பிரான்ஸ் வீரர் லூகாஸ் கிர்யாஸ் 456.5 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், அமெரிக்க வீரர் காவின் பார்னிக் 446.6 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியின் இறுதி சுற்றில் 14 வயது இந்திய வீராங்கனை நாம்யா கபூர் 50-க்கு 36 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பிரான்ஸ் வீராங்கனை காமிலி (33 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், இந்திய நட்சத்திர வீராங்கனை மானு பாகெர் (31 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த போட்டியில் இந்தியா 8 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.