

பிர்மிங்காம்
இங்கிலாந்து நாட்டில் 2026-ம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நடப்பு சாம்பியனான ஹாங்காங்கின் கா லாங் ஆங்கசுக்கு எதிரான ஆடவர் ஒற்றையர் போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென் விளையாடினார்.
முதல் செட்டில் 19-19 என்ற புள்ளி கணக்கில் இருவரும் சம நிலைக்கு போட்டியை கொண்டு வந்தனர். எனினும், அடுத்தடுத்து 2 புள்ளிகளை எடுத்து முதல் செட்டை 21-19 என சென் கைப்பற்றினார்.
2-வது செட்டில் 11-4 என சென் முன்னிலை வகித்ததும் போட்டியை வெல்ல போகிறார் என நினைத்தபோது, ஆங்கஸ் மெதுவாக முன்னேறினார். இறுதியில் 21-23 என்ற புள்ளி கணக்கில் 2-வது செட்டை ஆங்கஸ் கைப்பற்றினார்.
இதனால், 3-வது செட்டில் விறுவிறுப்பு காணப்பட்டது. எனினும், தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய சென் 21-10 என்ற புள்ளி கணக்கில் 3-வது செட்டை கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். இந்த போட்டி ஒரு மணி நேரம் மற்றும் 21 நிமிடங்கள் வரை நீடித்தது.