

சென்னை,
சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகம் சார்பில் பெரிய துறைமுகங்களுக்கு இடையிலான அகில இந்திய செஸ் மற்றும் கேரம் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 10 பெரிய துறைமுகங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் கேரம் தனிநபர் பிரிவில் சென்னை வீரர் நாராயண ராவ் முதலிடத்தையும், மும்பை வீரர் பாரிதம் தாம்பே 2-வது இடத்தையும், சென்னை வீரர் ராஜ்குமார் 3-வது இடத்தையும் பிடித்தனர். இதன் அணிகள் பிரிவில் சென்னை துறைமுக அணி முதலிடத்தையும், தீனதயாள் துறைமுக அணி (குஜராத்) 2-வது இடத்தையும் கைப்பற்றின. செஸ் போட்டியின் தனிநபர் பிரிவில் கோவா வீரர் கிரண் சோப்டிகர் முதலிடத்தையும், குஜராத் வீரர் வினோத் கோடியார் 2-வது இடத்தையும், கோவா வீரர் பிமப்பா ஹரிஜன் 3-வது இடத்தையும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் சென்னை துறைமுக அணி முதலிடத்தையும், தீனதயாள் துறைமுக அணி (குஜராத்) 2-வது இடத்தையும் சொந்தமாக்கின. பரிசளிப்பு விழாவுக்கு காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குனர் சுனில் பாலிவால் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.