ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்


ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
x

ஜோதி யர்ராஜி (image courtesy: SAI Media twitter)

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.

குமி,

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் 'ஸ்டீபிள் சேஸ்' தடை ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே தங்கப்பதக்கம் வென்றார். அவர் 8 நிமிடம் 20.92 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தார். தேசிய சாதனையாளரும், ஆசிய விளையாட்டு சாம்பியனுமான அவினாஷ் சாப்லே கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு தனக்கு முன்னால் சென்ற வீரரை முந்தி முதலிடத்தை சொந்தமாக்கினார். ஜப்பானின் யுடாரோ நினாய் (8 நிமிடம் 24.41 வினாடி) வெள்ளிப்பதக்கமும், கத்தாரின் ஜகாரியா எலாக்லாமி (8 நிமிடம் 27.12 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

மராட்டியத்தை சேர்ந்த 30 வயதான அவினாஷ் சாப்லே ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். 2019-ம் ஆண்டில் வெள்ளி வென்று இருந்தார். அத்துடன் 1989-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிஸ்சேஸ் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜெய்குமார், தர்ம்வீர் சவுத்ரி, மனு சாஜி, விஷால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 03.67 வினாடியில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. கத்தார் அணி (3 நிமிடம் 03.52 வினாடி) தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி 12.96 வினாடியில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தக்கவைத்தார். ஆந்திராவை சேர்ந்த 25 வயதான ஜோதி 2023-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். ஜப்பானின் யுமி தனகா (13.06 வினாடி) வெள்ளிப்பதக்கமும், சீனாவின் வூ யானி (13.06 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜிஸ்னா மேத்யூ, ருபல் சவுத்ரி, குன்ஜா ரஜிதா, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 34.18 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். நேற்று ஒரே நாளில் 3 தங்கம் அள்ளியது. இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சுபா வெங்கடேசன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் 400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் (6.33 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், ஷைலி சிங் (6.30 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். ஈரான் வீராங்கனை ரெய்லிஹானி மொபினி அரானி (6.40 மீட்டர்) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

1 More update

Next Story