

நிங்போ,
43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா, மாள்விகா பான்சோத் ஆகியோரும் களம் காணு கிறார்கள்.
இரட்டையரில் இந்திய முன்னணி ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை கடைசி நேரத்தில் விலகி இருக்கிறது. சாத்விக் சாய்ராஜ் தோள்பட்டை காயத்தில் இருந்து மீளாததால் வேறு வழியின்றி ஒதுங்க வேண்டியதாகி விட்டது. மற்றபடி ஹரிகரன் அம்சகருணன்- எம்.ஆர்.அர்ஜூன், கிருஷ்ண மூர்த்தி ராய்-சாய் பிரதீக், அஸ்வினி பாத்-ஷிகா கவுதம், திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த், பிரியா கொஞ்சென்பாம் -ஸ்ருதி மிஸ்ரா, கலப்பு இரட்டையரில் ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி, அஷித் சூர்யா-அம்ருதா பிரமுதேஷ், துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஆகிய இந்திய ஜோடிகளும் கால் பதிக்கிறார்கள்.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் 1965-ம் ஆண்டு இந்திய வீரர் தினேஷ் கண்ணா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதன் பிறகு ஒற்றையர் பிரிவில் இந்தியர் யாரும் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை லக்ஷயா சென், பி.வி.சிந்து போக்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.