ஆசிய கோப்பை கூடைப்பந்து: இந்திய அணி போராடி தோல்வி

ஜோர்டான் அணி 91-84 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை தோற்கடித்து
ஜெட்டா,
31-வது ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்றில் மோதும். தொடக்க நாளில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி, ஜோர்டானை (சி பிரிவு) எதிர்கொண்டது.
திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் இரு அணிகளும் 80-80 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டது. இதன் முடிவில் ஜோர்டான் அணி 91-84 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணியில் அதிகபட்சமாக அரவிந்த் கிருஷ்ணா 14 புள்ளியும், பிரணவ் பிரின்ஸ் 12 புள்ளியும் எடுத்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் 16 முறை சாம்பியனான சீனாவை நாளை சந்திக்கிறது.






