சர்ச்சைக்கு மத்தியில் அணியில் சேர்க்கப்பட்ட பஜ்ரங் பூனியா பதக்கமின்றி வெளியேற்றம்

வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் கைகி யமாகுச்சியுடன் மோதிய பஜ்ரங் பூனியா 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
கோப்புப்படம் WFI via ANI
கோப்புப்படம் WFI via ANI
Published on

ஹாங்சோவ்,

ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இந்த ஆண்டில் பெரும் பகுதியை அவர் போராட்டத்திற்காகவே செலவிட்டார். என்றாலும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணிக்கு தகுதி போட்டி இல்லாமல் நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் தகுதி சுற்றில் 65 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்ற விஷால் காளிராமன் மாற்று வீரராக வெளியே உட்கார வைக்கப்பட்டார். இது பெருத்த சர்ச்சையாக வெடித்தது. அவருக்கு இந்த வகையில் முன்னுரிமை அளித்தது தவறு என்று சில மல்யுத்த வீரர்கள் குரல் எழுப்பினர். ஆனாலும் அவர் அணியில் நீடித்தார்.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் அடியெடுத்து வைத்த பஜ்ரங் பூனியா முதல் சுற்றிலும், கால்இறுதியிலும் வெற்றி கண்டார். ஆனால் அரைஇறுதியில் ஈரானின் ரமன் அமோஜாட்கலிலியின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் 1-8 என்ற கணக்கில் சரண் அடைந்தார்.

இதையடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் கைகி யமாகுச்சியுடன் மோதிய பஜ்ரங் பூனியா அதில் 0-10 என்ற கணக்கில் தோற்று வெறுங்கையுடன் நாடு திரும்புகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com