

ஜகர்த்தா,
இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று சிறப்பான பங்காற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக 69 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், ஆசிய விளையாட்டு போட்டியின் இன்றைய நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்திச் செல்கிறார். இதனை இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் நரிந்தர் பத்ரா உறுதிசெய்துள்ளார்.
முன்னதாக 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய கொடியை ஏந்திச் சென்றார். இவர் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆசிய விளையாட்டு போட்டியின் கோலாகலமான நிறைவு விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறுகிறது. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை, பாடல் உள்ளிட்டவையுடன் பிரமிக்கத்தக்க வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.