

டோக்கியோ,
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே நீயா, நானா என்று மல்லுக்கட்டிய இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 20-20 என்ற கணக்கில் சமநிலை வகித்தன. அதன் பிறகு தனது பிடியை இறுக்கி முன்னிலை பெற்ற இந்திய அணி முடிவில் 40-34 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை மீண்டும் சொந்தமாக்கியது. இந்திய அணியில் அர்ஜூன் தேஷ் வால், தேவங் தலால் ரைடிலும், சுமித், ஜெய்தீப் டேக்கிளிலும் அசத்தினர். தோல்வி கண்ட ஈரான் அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.
இந்திய அணி 9-வது முறையாக தங்கத்தை தட்டித் துக்கியுள்ளது. 1990-ம் ஆண்டு அறிமுகமானதில் இருந்து தொடர்ச்சியாக 7 முறை தங்கப்பதக்கத்தை வென்று ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2018-ம் ஆண்டு வெண்க லப்பதக்கம் பெற்றது. 2022-ம் ஆண்டு மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. தற்போது அதனை தக்கவைத்து இருக்கிறது.
கபடியில் இந்திய பெண்கள் அணியும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.