

சென்னை,
19வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தீபிகா பலிக்கலும், ஜோஸ்னா சின்னப்பாவும் மோதினர். நெருங்கிய தோழிகளான இருவரும் களத்தில் நீயாநானா என்று கடுமையாக மல்லுகட்டினர். முதல் 4 செட்டுகளில் இருவரும் தலா 2 செட் வீதம் வசப்படுத்திய நிலையில் கடைசி செட்டில் அனல் பறந்தது. இதில் ஜோஸ்னாவின் கை ஓங்கியதுடன், தீபிகாவின் 78 நிமிட போராட்டத்துக்கும் முடிவு கட்டினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோஸ்னா சின்னப்பா 1315, 1210, 1113, 114, 114 என்ற செட் கணக்கில் தீபிகாவை வீழ்த்தி மகுடம் சூடி புதிய சரித்திரம் படைத்தார். 36 ஆண்டு கால ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியர் ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 30 வயதான ஜோஸ்னா கூறுகையில், இது போன்ற கவுரமிக்க போட்டித் தொடரில் அதுவும் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் வாகை சூடியதை நம்பவே முடியவில்லை. உண்மையிலேயே ஆட்டம் கடுமையாக இருந்தது என்றார்.
முன்னதாக நடந்த ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 115, 411, 811, 711 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் மேக்ஸ் லீயிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நடந்தது.