

புதுடெல்லி,
20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி வரை ஜப்பானின் அய்ச்சி மற்றும் நயோகா நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் 501 பேர் (267 வீரர்கள், 234 வீராங்கனைகள்) கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 310 பேர் முதல்முறையாக கால் பதிக்கிறார்கள். இந்தியா மொத்தம் 36 விளையாட்டுகளில் களம் காணுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்திய அணி தயாராகி இருப்பது குறித்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களை கண்டறியும் திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி என்.எஸ். ஜோஹல் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எல்லா விளையாட்டு பிரிவுகளிலும் இந்திய அணி நல்ல உத்வேகத்துடன் உள்ளது. நமது அணியில் நிறைய அறிமுக வீரர்கள் இடம் பெற்று இருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். இளம் வீரர்கள் ஆரம்பத்திலேயே உயர்மட்ட போட்டியில் நுழைய முடிந்தால் அது எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறியாகும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஆசிய விளையாட்டு போட்டி இலக்கு குழுவின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை 9 முறை நாங்கள் நடத்தி உள்ளோம். பல்வேறு சம்மேளனங்களில் உள்ள சிக்கல்களால் ஏற்படும் நிர்வாக சவால்கள் இருந்த போதிலும் விளையாட்டு வீரர்களுக்கு முடிந்த அளவுக்கு சிறந்த சூழலை வழங்குவதே எங்களின் முழு முயற்சியாக இருந்துள்ளது.
எங்களது அடிப்படை விளையாட்டு கட்டமைப்பான கேலோ இந்தியா போட்டி மூலம் வந்த 65 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிக்கு நமது வீரர்களை தயார்படுத்துவதற்காக கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்றல், விளையாட்டு உபகரணங்கள் வாங்க உதவுதல் மற்றும் பயிற்சியாளர்கள், சிறப்பு நிபுணர்களை நியமித்தல் ஆகியவற்றுக்காக ரூ.702 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. நாங்கள் எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளோம். இறுதியாக வீரர்களிடம் இருந்து சிறந்த செயல்திறன் வெளிவர வேண்டும்' என்றார்.