

கீவ்,
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடர்ந்து 8வது நாளாக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்து வருகிறது. இதில் வீரர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. உக்ரைனில் பல இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன.
இந்த நிலையில், போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கார் பந்தய போட்டிகளை நடத்தும் பார்முலா ஒன் அமைப்பு, கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை நடத்துவதில் இருந்து ரஷியாவை நீக்கியுள்ளது. ரஷிய கிராண்ட் பிரிக்ஸ் ஏற்பாட்டாளர்கள் உடனான ஒப்பந்தமும் ரத்து செய்யப்படுகிறது. இதனால், ரஷியாவில் வருங்காலத்தில் எப் ஒன் கார்பந்தய போட்டிகள் நடைபெறாது என அதுபற்றிய அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.
எனினும், எப் ஒன் அமைப்பின் முன்னாள் தலைவர் பெர்னீ எக்ளெஸ்டோன் கூறும்போது, நான் அறிந்தவரை ரஷியாவில் போர் எதுவும் இல்லை. அதனால் கார் பந்தய போட்டிகள் நடத்தப்பட்டால் யாருக்கும் எதுவும் ஏற்படாது.
ரஷியாவை இந்த வழியில் தண்டிக்க நினைப்பது புதினை எந்த வகையிலும் தண்டிக்காது. கார் பந்தயமெல்லாம் அவருக்கு ஒரு விசயமே இல்லை என தெரிவித்துள்ளார்.