உலக மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ரவிகுமார் வெண்கலப்பதக்கம் வென்றனர் - சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரவிகுமார் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். முன்னாள் சாம்பியனான சுஷில் குமார் தகுதி சுற்றிலேயே தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.
உலக மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ரவிகுமார் வெண்கலப்பதக்கம் வென்றனர் - சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி
Published on

நுர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள நுர் சுல்தானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ உடல் எடைப்பிரிவில் முந்தைய நாள் நடந்த அரைஇறுதியில் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா நேற்று நடந்த வெண்கலப்பதத்துக்கான போட்டியில் 8-7 என்ற புள்ளி கணக்கில் மங்கோலியா வீரர் துல்கா துமுர் ஒசிரை போராடி வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார். ஒரு கட்டத்தில் 0-6 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கி இருந்த பஜ்ரங் பூனியா கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு சரிவில் இருந்து மீண்டு வந்ததுடன் பதக்கத்தையும் வசப்படுத்தினார். உலக போட்டியில் பஜ்ரங் பூனியா வென்ற 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2013-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும், 2018-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார்.

வெற்றிக்கு பிறகு பஜ்ரங் பூனியா அளித்த பேட்டியில், அரைஇறுதியில் எனக்கு நேர்ந்ததை ஒருபோதும் மறக்கமாட்டேன். அந்த தோல்வியால் எனது இதயமே சுக்குநூறாகியது. வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் கலந்து கொள்ள கூட எனக்கு விருப்பமில்லை. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை உலகமே பார்த்தது. உலக போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக கடுமையாக பயிற்சி எடுத்து இருந்தேன். எனது பயிற்சியாளர் பதக்கம் எப்பொழுதும் பதக்கம் தான் என்று சொல்லி என்னை தேற்றியதால் தான் இந்த போட்டியில் பங்கேற்க ஒப்புக்கொண்டேன். உலக போட்டியில் இந்தியாவுக்காக 3-வது பதக்கத்தை வென்றது பெருமை அளிக்கிறது. எனக்கு நடந்த சம்பவம் குறித்து ஏதாவது செய்யுமாறு உலக மல்யுத்த சம்மேளனத்தை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

57 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா 6-3 என்ற புள்ளி கணக்கில் ஆசிய சாம்பியனான ஈரானின் ரீஜா அட்ரி நாகர்சியை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். தனது அறிமுக உலக போட்டியிலேயே ரவிகுமார் பதக்கம் வென்று கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

அரியானாவைச் சேர்ந்த விவசாயியின் மகனான ரவிகுமார், நான் விரும்பியபடியே சாதித்து விட்டேன். பதக்கத்தோடு, ஒலிம்பிக் வாய்ப்பையும் பெற்று இருக்கிறேன். இதில் கிடைத்த அனுபவத்தின் மூலம் இன்னும் முன்னேற்றம் காண்பேன் என்றார்.

பதக்கத்தை கைப்பற்றிய பஜ்ரங் பூனியாவும், ரவிகுமாரும் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடந்த 74 கிலோ உடல் எடைப்பிரிவில் முன்னாள் சாம்பியனான 36 வயது இந்திய வீரர் சுஷில் குமார், அஜர்பைஜான் வீரர் காத்ஸ்ஹிமுராட்டை எதிர்கொண்டார்.

தனது அனுபவத்தின் மூலம் ஒரு கட்டத்தில் 9-4 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த சுஷில் குமார் கடைசி கட்டத்தில் சோர்வு அடைந்தார். அந்த சந்தர்ப்பத்தில் காத்ஸ்ஹிமுராட் தொடர்ச்சியாக 7 புள்ளிகளை குவித்தார். முடிவில் சுஷில் குமார் 9-11 என்ற புள்ளி கணக்கில் காத்ஸ்ஹிமுராட்டிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார். அவரை சாய்த்த வீரர் கால்இறுதியில் தோற்றதால், சுஷில் குமார் மேற்கொண்டு வாய்ப்பு இல்லாமல் வெறுங்கையுடன் வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com