

போஸ்டன்,
உலகின் மிகப்பழமையான மாரத்தான் தொடரான போஸ்டன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான போட்டி, ஏப்ரல் 18, 2022 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1897ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகின் மிகப்பழமையான வருடாந்திர மாரத்தான் தொடரான போஸ்டன் ஓட்டப் பந்தயம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்ற வீரர்களிடம், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற 125ம் ஆண்டு போஸ்டன் மாரத்தான் போட்டியில், 20 ஆயிரம் பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 126வது போஸ்டன் மாரத்தான் போட்டியில் 30 ஆயிரம் பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு அமெரிக்காவின் ஹோப்கிண்டன் பகுதியில் இருந்து இந்த தொடர் ஓட்டப் பந்தயம் தொடங்கும். 42 கிலோமீட்டர் தூரத்தை பங்கேற்பாளர்கள் ஓடி கடக்க வேண்டும். கடந்த ஆண்டு, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போஸ்டன் தடகள சங்கத்தின் தலைவரும், முதன்மை நிர்வாக அதிகாரியுமான டாம் கிரில்க் கூறுகையில், 125-வது போஸ்டன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்களில், 93% சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தனர். என்று தெரிவித்துள்ளார்.
போஸ்டன் தடகள சங்கம் 1887ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கம் போஸ்டன் தொடர் ஓட்டப்பந்தயத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதை உலகின் பல பகுதிகளிலும் பெரும் மதிப்பாக கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.