சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: வைஷாலியை வீழ்த்திய ஹரிகா

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்படும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 10 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதே போல் ராய் ராப்சன் (அமெரிக்கா)- கார்த்திகேயன் முரளி (இந்தியா), விதித் குஜராத்தி (இந்தியா)- அனிஷ் கிரி (நெதர்லாந்து) இடையிலான ஆட்டங்கள் டிரா ஆனது.

ஜோர்டன் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து), நிஹால் சரினையும் (இந்தியா), அவோன்டர் லியாங் (அமெரிக்கா), பிரணவையும் (இந்தியா) தோற்கடித்தனர். இன்னும் 3 சுற்று எஞ்சியுள்ள நிலையில் வின்சென்ட் கீமர் 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அர்ஜுன் எரிகைசி, அவோன்டர் லியாங் தலா 3 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

சேலஞ்சர்ஸ் பிரிவில் நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கருப்புநிற காய்களுடன் ஆடிய ஹரிகா துரோணவல்லி 80-வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை ஆர். வைஷாலியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றார். மற்ற ஆட்டங்களில் பிரனேஷ், அபிமன்யு புரானிக்கையும், லியோன் லுக் மென்டோன்கா, ஆர்யன் சோப்ராவையும், அதிபன், தீப்தயன் கோசையும் வென்றனர். தமிழகத்தின் இனியன்- ஹர்ஷவர்தன் இடையிலான ஆட்டம் டிரா ஆனது. இன்று 7-வது சுற்று ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com