செஸ் ஒலிம்பியாட் பயிற்சி போட்டி: இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததில் சாதனை..!

1,414 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் பயிற்சி போட்டி மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது.
image courtesy: International Chess Federation twitter
image courtesy: International Chess Federation twitter
Published on

மாமல்லபுரம்,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது. வீரர், வீராங்கனைகள் மற்றும் போட்டிக்கான அதிகாரிகள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகளில் போதுமான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் பிரமாண்டமான இரு அரங்குகளிலும் சேர்த்து மொத்தம் 707 டிஜிட்டல் செஸ் போர்டுகள் மேஜைகளில் தயார் நிலையில் உள்ளது. செஸ் ஒலிம்பியாட்டுக்கு முன்பாக, போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செஸ் போர்டுகள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் எல்லாம் துல்லியமாக செயல்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

இதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் நேற்று பயிற்சி போட்டி நடைபெற்றது. பயிற்சி போட்டியை காலை 10 மணிக்கு அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டிக்காக செய்யப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகளை தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று பகலில் நேரில் பார்வையிட்டார். அவரை அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பரசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் அபூர்வா, காஞ்சீபுரம் தொகுதி எம்.பி.செல்வம், எஸ்.எஸ். பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர். இரு அரங்குகளையும் சுற்றி பார்த்த உதயநிதி ஸ்டாலின் சிறிது நேரம் செஸ் விளையாடியும் மகிழ்ந்தார்.

9 சுற்றுகள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்ற 1,414 வீரர், வீராங்கனைகள் 707 டிஜிட்டல் செஸ் போர்டுகளில் அமர்ந்து ஆச்சரியம் கலந்த ஆர்வத்துடன் ஆடினார்கள். 5 வயது சிறுமி முதல் 80 வயது முதியவர் வரை இந்த போட்டியில் உற்சாகத்துடன் காய்களை நகர்த்தி திறமையை காட்டினர். இதில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 100-க்கும் மேற்பட்டோர் களம் கண்டதால் போட்டி நடைபெற்ற இடம் களைகட்டியது. ஒரே நேரத்தில் 707 செஸ் போர்டில் 1,414 வீரர்கள் ஆடிய பயிற்சி போட்டி இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் அதிக போர்டுகளில் நடந்த போட்டியை இணையம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்த சாதனையை இந்த செஸ் ஒலிம்பியாட் படைத்துள்ளது.

இதற்கிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக சென்னை வந்தடைந்தனர். தென்ஆப்பிரிக்கா, உருகுவே, நைஜீரியா, டோகோ, ஹாங்காங், மலேசியா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த 18 வீரர், வீராங்கனைகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்று தங்கும் இடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். முன்னதாக வீரர்கள் விமான நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தின் (தம்பி) முன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

'ரேபிட்' முறையில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா 9 புள்ளிகளுடன் வெற்றிக்கோப்பையை வசப்படுத்தினார்.

முன்னதாக 8-வது ரவுண்ட் முடிவில் விஷ்ணு பிரசன்னாவுடன், ரவி தேஜா (ஆந்திரா), மற்றொரு தமிழக வீரர் ராகுல் ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். கடைசி சுற்றில் விஷ்ணு பிரசன்னா, ரவிதேஜாவை தோற்கடித்தார். ராகுல், மேற்கு வங்காள வீரர் குண்டு சுபாயனிடம் தோல்வியை தழுவினார். இதனால் விஷ்ணு பிரசன்னா முதலிடத்தை தட்டிச் சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com