

கோபன்ஹேகன்,
டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று நடந்த 800 மீட்டர் பிரீஸ்டைல் போட்டி ஒன்றில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் (வயது 16) கலந்து கொண்டார். அவர் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
அவர் பந்தய தொலைவை 8 நிமிடம் 17 வினாடிகளில் கடந்துள்ளார். இதுபற்றி நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள செய்தியில், தங்கம். (தங்க பதக்க எமோஜிக்களை வெளியிட்டு உள்ளார்). உங்கள் அனைவரது ஆசிகள் மற்றும் கடவுளின் மகிமையால் வெற்றிக்கான பாதை தொடர்கிறது (சிவப்பு இதயம் மற்றும் வணங்கும் கைகளின் எமோஜிக்களை வெளியிட்டு உள்ளார்).
இன்று 800 மீட்டர் பிரிவில் வேதாந்த் மாதவன் தங்க பதக்கம் வென்றுள்ளார். மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனேன். பயிற்சியாளர் பிரதீப் சார், நீச்சல் கூட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த அணிக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.
இதற்கு முன், நேற்று நடந்த 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் பந்தய தொலைவை, 15 நிமிடம் 57 வினாடிகளில் கடந்து 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
இதேபோன்று மற்றொரு இந்திய வீரரான சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் 1 நிமிடம் 59 வினாடிகளில் பந்தய தொலைவை எட்டி தங்க பதக்கம் வென்றார்.
இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்களை பெற்று சாதனை படைத்த இருவரையும் பற்றி நடிகர் மாதவன் தனது டுவிட்டரில் பதிவிட்டார். இந்திய நீச்சல் கூட்டமைப்பு மற்றும் துபாயில் உள்ள அகுவா தேசிய விளையாட்டு அகாடமி மற்றும் பயிற்சியாளர் பிரதீப் ஆகியோருக்கும் நடிகர் மாதவன் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
இதனை தொடர்ந்து வேதாந்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகர் அபிஷேக் பச்சனும் டுவிட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இன்று நடந்த போட்டில் தங்கம் வென்றதற்காக நடிகர் சிக்கந்தர் கெர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச்சில் லத்வியா ஓபனில் வெண்கல பதக்கம் வென்ற பின்னர், இளநிலை தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில், கடந்த ஆண்டில் வேதாந்த் 7 பதக்கங்களை (4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம்) வென்றுள்ளார்.